Headlines

பழனி அருகே 3 நாட்களாக தொடரும் மின்வெட்டு: அலட்சியம் காட்டும் மின்சார வாரியம் – தவிக்கும் கலிக்கநாயக்கன்பட்டி மக்கள் கொந்தளிப்பு!

பழனி அருகே 3 நாட்களாக தொடரும் மின்வெட்டு: அலட்சியம் காட்டும் மின்சார வாரியம் – தவிக்கும் கலிக்கநாயக்கன்பட்டி மக்கள் கொந்தளிப்பு!

பழனி: செப். 11,
பழனி அருகே உள்ள கலிக்கநாயக்கன்பட்டி பகுதியில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. பலமுறை புகார் அளித்தும் மின்வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மின்வெட்டு காரணமாக பகல் நேரக் கடும் புழுக்கத்திலும், இரவு நேரக் கொசுக்கடியிலும் தூக்கத்தைத் தொலைத்து மக்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாகப் பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் புழுக்கம் தாங்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டு, அன்றாடத் தேவைகளுக்கே குடங்களை எடுத்துக்கொண்டு அலையும் அவலநிலை உருவாகியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரவில் படிக்க முடியாமல் தவிப்பதோடு, குளிர்சாதனப் பெட்டிகளை நம்பியுள்ள சிறு வணிகர்கள் மற்றும் பெட்டிக் கடைக்காரர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.

மின் தடை ஏற்பட்ட முதல் நாளிலிருந்தே கிராம மக்கள் மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்புகொண்டு முறையிட்டு வருகின்றனர். ஆனால், ஊழியர்கள் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று மழுப்பலான பதில்களை மட்டுமே கூறி வரும் அதிகாரிகள், மூன்று நாட்களாகியும் களத்தில் எந்தத் துரித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒரு கிராமமே இருளில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது அதிகாரிகளின் உச்சக்கட்ட அலட்சியத்தையும் கடமை தவறிய போக்கையுமே காட்டுகிறது.
மின்சார வாரியத்தின் இந்த அஜாக்கிரதை நீடித்தால், அலுவலகத்தை முற்றுகையிட்டுப் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கலிக்கநாயக்கன்பட்டி கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

இனியாவது உயர் அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு மின் விநியோகத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கையாக உள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *