நவராத்திரி விழாவையொட்டி காப்புக் கட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அக்டோபர் 11 ஆம் தேதி ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், 12 ஆம் தேதி விஜயதசமி அன்று பழனி கோயிலில் அம்பு வில் போடுதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. இதனையொட்டி, பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜை, அலங்காரம், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய புதிய கட்டுப்பாடுகள் விதித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதில், விஜயதசமி தினத்தன்று காலை 11.30 மணி முதல் அனைத்து தரிசனக் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும்.
மலைக் கோயிலின் படிப் பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் என மூன்று வழிப் பாதைகளில் 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 11 மணிக்குப் பிறகு வரும் பக்தர்கள் மலைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, மறுநாள் முதல் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல தரிசனத்துக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.