திருநெல்வேலி – அக்.26 : திருநெல்வேலி “மனோன்மணியம்” சுந்தரனார் பல்கலைக்கழகத்தின், 3-வது பட்டமளிப்பு விழா, திருநெல்வேலி அபிஷேகப்பட்டியில் உள்ள, பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் கலையரங்கில், இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.
இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என். ரவி, நேரடியாக பங்கேற்று, “தங்கப்பதக்கம்” பெற்ற 14 ஆண்கள், 97 பெண்கள் என, 111 பேர்களுக்கும், “முனைவர்” பட்டம் பெற்ற 83 ஆண்கள், 377 பெண்கள் என,460 பேர்களுக்குமாக, மொத்தம் 571 பேர்களுக்கு, பட்டங்களை வழங்கினார். மொத்தம் பட்டம் பெற்ற 33821 பேர்களில், 571 பேர்கள் மட்டுமே, ஆளுநரிடமிருந்து நேரடியாக பட்டங்களை பெற்றனர். மீதியுள்ள 33, 250 பேர்கள், நேரடியாக பெறவில்லை.
திருவனந்தபுரத்தில் உள்ள, தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் என்.வி.சலபதி ராவ், முதன்மை விருந்தினராக பங்கேற்று, பட்டமளிப்பு விழா “பேருரை” நிகழ்த்தினார். பல்கலைக்கழக துணைவேந்தர் “முனைவர்” ந. சந்திர சேகர், அனைவரையும் வரவேற்று, அறிக்கை வாசித்தளித்தார். பல்கலைக்கழக பதிவாளர் “முனைவர்” ஜே. சாக்ரடீஸ், நன்றி கூறினார். முன்னதாக பட்டமளிப்பு விழா முந்தைய நாள் மாலையிலேயே, திருநெல்வேலி வந்தடைந்த தமிழக ஆளுநரை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப, கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோர், நெல்லை வண்ணார்ப்பேட்டை சுற்றுலா மாளிகையில், “மலர்க்கொத்து” கொடுத்து அன்புடன், வரவேற்றனர்.
திருநெல்வேலி செய்தியாளர் : மேலப்பாளையம் ஹஸன்.