Headlines

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்.

தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு திட்டம் விரிவாக்கம் — நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கல்

நாகர்கோவில், பிப். 9:

முதலமைச்சர் தொடங்கிய திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவு; கன்னியாகுமரியில் 3,200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன்பெற்றனர்.

தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர்களுக்கான 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் தெரிவித்தார். ஏழை, எளியோரின் பசியை போக்கும் நோக்கில் செயல்படும் அரசு இதுவென அவர் பெருமிதம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் தொடங்கி வைத்த திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை எம்.டி.பி. சமூக நலக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையிலும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் முன்னிலையிலும் அமைச்சர் உணவுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
“தூய்மை பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 2025 நவம்பர் 15ஆம் தேதி 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம், பின்னர் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் டிசம்பர் 6 முதல் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

தூய்மை பணியாளர்களின் ஊட்டச்சத்து, நலன் மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, அவர்கள் பசியுடன் பணியில் ஈடுபடாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக முன்னேற்றக் குறியீடுகளில் தமிழ்நாடு உயர்ந்த நிலையில் இருப்பதற்கு இதுபோன்ற மக்கள் நலத் திட்டங்களே காரணம்,” என்றார்.

இந்த திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் 1,372 பேருக்கும், குழித்துறை நகராட்சியில் 108 பேருக்கும், பத்மநாபபுரம் நகராட்சியில் 111 பேருக்கும், குளச்சல் நகராட்சியில் 91 பேருக்கும், கொல்லங்கோடு நகராட்சியில் 187 பேருக்கும், கன்னியாகுமரி நகராட்சியில் 82 பேருக்கும், மேலும் 50 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1,316 தூய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்சி லதா, நகர்நல அலுவலர் மனோஜ் குமார், மண்டலத் தலைவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *