திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த நிலையில் கிராம பொதுமக்கள் சார்பாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் நேரில் வந்து புகார் அளித்தால் மட்டுமே மின்விநியோகம் தடைபட்டுள்ளதை சரிசெய்ய முடியும் என்பதாக கூறியுள்ளனர். SS2 டிரான்ஸ்பார்மர் முழுவதுமாக பழுதடைந்துள்ளதை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கூறிவந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் மின்சாரம் இல்லாத காரணத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தது. அதனை சரிசெய்யும் பணிகளை தற்போது வரை மின்வாரியம் செய்யாததால் இரவு நேரங்களில் பொந்துப்புளி கிராமம் இருளில் மூழ்கியது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் விரைவாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.