உடுமலை
நவம்பர் 15.

உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் மு.மத்தீன் தலைமை வகித்தார்.நகராட்சி ஆணையாளர் ஜெ.விநாயகம் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.
முதல் நிகழ்வாக கரூர் கூட்ட நெரிசல்,ஹைதராபாத் பஸ் விபத்து மற்றும் செங்கோட்டை விபத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 78 தீர்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டது.
இதில் 17-வது தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது, ராஜேந்திரா ரோடு மற்றும் பசுபதி வீதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
பொதுமக்கள் நலனுக்காக நகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள தள்ளுவண்டி கடைகளை ஒரு சிலர் தவறான நிகழ்வுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
அதை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேதாஜி விளையாட்டு மைதானத்தை ஒட்டிய வித்யாசாகர் சாலையில் தள்ளு வண்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.
இதனால் சாலை குறுகலாக மாறி உள்ளதுடன் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தள்ளுவண்டிக் கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உழவர் சந்தையில் முன்புள்ள சாலை இரண்டு புறங்களிலும் கடைகள் அமைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு சிறு விபத்துகளும் நடைபெற்று வருகிறது.
வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தாராபுரம் சாலை உள்ளிட்ட உடுமலையின் முக்கிய பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை.
இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தெருவிளக்குகளை பராமரிப்பு செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா குடியிருப்பின் நுழைவுப் பகுதியில் பாலம் பராமரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் பள்ளி குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வார்டுகளில் கொசு மருந்து முறையாக அடிக்கப்படுவதில்லை.
இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறது.
நெடுஞ்செழியன் காலனியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி வருகிறது.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட சாலையின் ஓரங்களில் செடிகள் புற்கள் முளைத்துள்ளது.
அதற்கு மருந்து தெளிக்க வேண்டும்., அதே போன்று மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குப்பை அள்ளும் 3 சக்கர தள்ளுவண்டிகள் பழுதடைந்து உள்ளது.இதன் காரணமாக தூய்மை பணியாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
அந்த வண்டிகளை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.

இந்த நிகழ்வில் நகர திமுக செயலாளர் வேலுச்சாமி,நகர மன்ற துணைத் தலைவர் கலைராஜன்,ரமலா, அஸ்வதி விக்ரம்,சிவகாமி சின்னத்துரை,அர்ஜுனன், வின்சென்ட், ராமதாஸ், ஜெயக்குமார், ராஜசேகர்,ரீகன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
