வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.அதை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால் கழிவு நீர் கால்வாயில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஒரு சில பகுதியில் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.இதன் காரணமாக அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து பொதுமக்களை பதம் பார்த்து வருகிறது. அந்த வகையில் மீர்கவுஸ் லே-அவுட் 2-வது வீதிக்கு செல்லும் நுழைவுப் பகுதியில் தரைமட்ட பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் வழிந்து செல்ல வழி இல்லாமல் தேங்கி வந்தது. அதைத் தொடர்ந்து சாலையில் வாய்க்கால் போன்ற அமைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பாலத்தில் உள்ள அடைப்பை நீக்காமல் சாலையில் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதனால் நிரந்தர தீர்வாக பாலத்தை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.அதுவரையிலும் தற்காலிக தீர்வாக சாலையின் குறுக்காக குழாய் அமைத்து தண்ணீரை வெளியேற்றுவதற்கும் பொதுமக்களின் தடையில்லா பயணத்திற்கு வழிவகை செய்யவும் நிர்வாகம் முன் வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
உடுமலை நிருபர் : மணி