உடுமலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமிமுருகன் தலைமை வகித்தார்.வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சிவகுருநாதன்,சுரேஸ்குமார் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.அப்போது பல்வேறு செலவினங்கள் மற்றும் இதர தீர்மானங்கள் 43 மன்ற பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதன்படி தளி பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி,பேரூராட்சி சமையலறை கூடம் உள்ளிட்ட 7 கட்டிடங்களை தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைத்தல், பெரியவாளவாடியில் செயல்பட்டு வரும் 4 ஊரக வணிக வளாக கடைகளுக்கு நடைபெற்ற ஏலத்தை அங்கீகரிக்க வேண்டுதல், உடுமலை வட்டாரத்தில் உள்ள 27 மீன் பாசி குட்டைகளில் மீன் வளர்த்து பிடிக்கும் ஏலத்தை அங்கீகரிக்க வேண்டுதல், போடிபட்டி ஊராட்சியில் என். கே.எஸ் நகரில் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு சுவர் கட்டுவதற்கு அனுமதி வேண்டுதல், ஒப்பந்ததாரரை நியமனம் செய்யக் கோருதல், 42-வது தீர்மானமாக ஒன்றிய பொது நிதியிலிருந்து ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கான்கிரீட் தளம் மற்றும் சாலை அமைத்தல், தார் சாலை அமைத்தல்,சிமெண்ட் சாலை அமைத்தல்,கழிவு நீர் கால்வாய் அமைத்தல், சின்டெக்ஸ் டேங்க் அமைத்தல், குடிநீர் குழாய் அமைத்தல்,குறிஞ்சேரி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் கலையரங்கம் அமைத்தல், உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சிமெண்ட் குடோன்கள் மற்றும் அதன் சுற்று சுவரை மேம்பாடு செய்தல்,43-வது தீர்மானமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழுதடைந்த குடோன்,கான்கிரீட் கட்டிடம், ஓட்டுக் கூடை கட்டிடம், கால்நடை ஆஸ்பத்திரி கட்டிடங்களை இடித்து அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் உறுப்பினர்களால் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
அப்போது கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வாய்க்கால் பாலம், முல்லை நகர்,வெஞ்சமடை பகுதியில் குடிதண்ணீர் வந்து 22 நாட்கள் ஆகிறது.இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.எனவே உடனடியாக குடிதண்ணீரை வழங்குவதற்கு முன் வர வேண்டும்.மேலும் பழுது அடைந்த தெருவிளக்குகளை புதுப்பிக்க வேண்டும்,சின்ன வீரம்பட்டியில் புதிதாக சேர்ந்த 100 நாள் பணியாளர்களுக்கு அட்டைகள் வழங்கவில்லை. ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமராவதி பஸ் நிலையத்தின் அருகே சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். சைனிக் பள்ளி மற்றும் சுற்றுலா தலமான இங்கு சுகாதார வளாகம் இல்லாததால் பெற்றோர்கள், சுற்றுலார பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறுப்பினர்கள் பேசினார்கள்.
அதைத் தொடர்ந்து கணக்கம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிர்வாகத்தின் சார்பில் சீரமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மலர்விழி பாபு, பொதுக்குழு உறுப்பினர் பாபு,திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் முருகன் உள்ளிட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள்,பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உடுமலை : நிருபர் : மணி