திருநெல்வேலி : நவ 20 – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான, “வழக்கறிஞர்” கு.செல்வப் பெருந்தகை தலைமையிலான சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர், திருநெல்வேலி மாவட்டத்துக்கு வருகை தந்தார். தொடர்ந்து அந்த குழுவினர், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் அங்கேயே, தொழிற்துறை உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற, “கலந்தாய்வு” கூட்டத்தில், பங்கேற்றனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு, திருநெல்வேலி மாநகர பகுதியில், வண்ணார் பேட்டை வடக்கு புறவழிச்சாலையில், “தாமிரபரணி” ஆற்றின் குறுக்கே, 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும், உயர்மட்ட பாலத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு உடையார்பட்டியில் தொடங்கி, பாளையங்கோட்டை வேயந்தான் குளம் புதிய பேருந்து நிலையம் வரை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலைகளில், சுமார் 4 கிலோமீட்டர் தொலைவினை நான்குவழிச் சாலையாக மாற்றிடும் பணிகள், மொத்தம் 51 கோடி ரூபாய் மதிப்பில், 2022-ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருதையும், சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். இந்த ஆய்வினை முடித்த பின்னர், இக்குழுவினர் பகளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் எதிரே அமைந்துள்ள, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலகத்துக்கு வந்து, வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மழை வெள்ள காலங்களில் மீட்புப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரப்பர் படகு, ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளை, கேட்டறிந்தனர். நிறைவாக, திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற, தணிக்கை மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான, ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் திருத்தணி சந்திரன், நாங்குநேரி மனோகரன், சார்பு செயலாளர் பால சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், இந்த ஆய்வுகளில் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.