திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் , காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழரின் விருந்தோம்பல் பண்பை தெரிந்து கொள்வதற்கும், நம் பாரம்பரிய பண்பாட்டின் உணவு கலாச்சாரத்தின் பயன்களை அறிந்து கொள்வதற்கும், இன்று 22.10.2024 உணவு திருவிழா நடைபெற்றது. இதில், பெரும்பாலும் நெருப்பை பயன்படுத்தாமல் நெருப்பில்லா சமையல் என்ற தலைப்பில் சமூக அறிவியல் மன்றம் சார்பில் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளியின் ஆசிரியர் சையது முகமது குலாம்தஸ்தகீர் வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.
தமிழரின் விருந்தோம்பல் பண்பை உதவி தலைமை ஆசிரியர் ஜெய்சிங் மற்றும் ஆசிரியை நாகவேணி மாணவ , மாணவிகளுக்கு விளக்கினர். சமூக அறிவியல் ஆசிரியை ராஜேஸ்வரி சமூக அறிவியல் மன்றம் சார்பாக உணவின் அவசியம் பற்றி விளக்கமளித்தார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மாணவர்கள் தானியங்கள் மற்றும் பழ வகைகள் , காய்கறி வகைகள் கிழங்கு வகைகள் , பயிர் வகைகள் போன்றவைகளை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் மற்றும் பல ரசங்களை செய்து காட்டினர். இந்நிலையில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். பள்ளியின் அனைத்து மாணவர்களும் இந்நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். போட்டியின் நடுவர்களாக தமிழ் ஆசிரியர்கள் வசந்தராணி, பாப்புகுட்டி , ஆங்கில ஆசிரியர் பரிமளா மற்றும் பார்வதி ஆகியோர் பங்கேற்றனர்.
நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று குழுவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அதில், ஏழாம் வகுப்பு ‘அ பிரிவு’ மாணவிகள் முதலிடம் பிடித்தனர். அனு ஶ்ரீ , கனிகா , மதுமித்ரா, சமீனா பிடித்த ஏழாம் வகுப்பு ‘ஆ பிரிவு’ மாணவி தாரணி இரண்டாவது இடமும், மூன்றாவதாக ஆறாம் வகுப்பு ‘ஆ பிரிவு’ மாணவிகள் சுப ஸ்ரீ மற்றும் தேவதர்ஷினி வெற்றி பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் பள்ளியின் ஆசிரியர் கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் விஜயன் மற்றும் கார்த்திகேயன் செய்திருந்தனர்.