Headlines

திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து ரீல்ஸ் செய்த நபர்கள் கைது.

திண்டிவனம் : நவம்பர், 20.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்து, எக்ஸ்பிரஸ் ரயில் பழுதுக்கு காரணமான 5 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை – காரைக்குடி இடையே தினசரி இயங்கி வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த 9ம் தேதி மதியம், சென்னை எக்மோரிலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை கடந்து வந்தபோது, திடீரென ரயில் இன்ஜினில் சத்தம் எழுந்ததால், விக்கிரவாண்டி அடுத்த பேரணி பகுதியில் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, ரயில் இன்ஜின் முன் சக்கரத்தில் உடைப்பு இருந்ததால், உடனடியாக விழுப்புரத்திலிருந்து மாற்று இன்ஜின் வரவழைத்து, அதில் இணைத்து, 2 மணி நேரம் தாமதமாக ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.

தண்டவாளத்திற்கும், இன்ஜினுக்கும் இடையே சத்தம்!

இந்நிலையில், அந்த ரயில் ஒலக்கூர் – திண்டிவனம் பகுதியில் வந்தபோது, திடீரென தண்டவாளத்திற்கும், இன்ஜினுக்கும் இடையே சத்தம் ஏற்பட்டதாக, ரயில் டிரைவர் அளித்த தகவலின் பேரில், ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் குழு சோதனை நடத்தினர். அப்போது, ஒலக்கூர் அருகே மேல்பேட்டை பகுதியில் விஷமிகள் சிலர், இரும்பு துண்டை தண்டவாளத்தில் வைத்ததால், தண்டவாளமும், இன்ஜின் சக்கரமும் சேதமடைந்திருந்ததை கண்டறிந்து, அதனை சீர்படுத்தினர்.

செல்போனில் படம் பிடித்து ரீல்ஸ்

இது குறித்த புகாரின் பேரில், திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் குழுவினர், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியபோது, திண்டிவனம் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும், வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், மதுபோதையில், விளையாட்டாக ரயில் தண்டவாளத்தில் இரும்பு துண்டை வைத்தும், அதனை செல்போனில் படம் பிடித்து ரீல்ஸ் போட்டு விளையாடியதும், அந்த இரும்பு துண்டு தான், பல்லவன் ரயில் இன்ஜின் சக்கரத்தையும், தண்டவாளத்தையும் சேதப்படுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து, ரயில் விபத்தை ஏற்படுத்தும் விதத்தில், ஆபத்தை உணராமல் செயல்பட்டதாக, பீகாரை சேர்ந்த ஜமுனாராம் மகன் அபிஷேக்குமார் (25) சோட்டேலால் மகன் ஆகாஷ்குமார் (21), விஜய்ராம் மகன் பாபுலால் (20), ராஜிராம் மகன் தீபக்குமார் (23), துபானிராம் மகன் ராஜாராம் (20) ஆகியோர் மீது திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுரேஷன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்து, நேற்று விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *