திருநெல்வேலி, அக். 8:-
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா, இன்று (அக்டோபர். 8) மேலப்பாளையம் மண்டலப் பகுதியில் 31-வது வார்டில் உள்ள, முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் சாலைகள் 45-வது வார்டில் பள்ளிக்கூடம் தெரு, 48-வது வார்டில், பீடித்தொழிலாளர் காலனி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தார் சாலைகள் ஆகியவற்றை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். முக்கியமாக, இந்தப்பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலைகளின் தரத்தினை, உன்னிப்பாக அவர், ஆய்வு மேற்கொண்டார்.
தச்சநல்லூர் மண்டலத்தில், மாநகராட்சிக்கு சொந்தமானதாக உள்ள, ராமையன் பட்டி குப்பை கிடங்கிற்கு, திருநெல்வேலி,தச்சநல்லூர், பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம்- ஆகிய நான்கு மண்டலப் பகுதிகளில், தூய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு, கொண்டு செல்லும் குப்பைகள் எடை போடப்பட்டு, அங்கு மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என, தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள எடைமேடையில், கணினி மூலம் குப்பைகள் எடை போடப்பட்டு, பதிவேடு அடிப்படையில், நாள் ஒன்றுக்கு எவ்வளவு குப்பைகள் வருகின்றன? என்பது, இதுவரையிலும் கணக்கிடப்பட்டு வந்தது.
ஆனால், தற்போது “ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டர் மூலமாக, எடை போட வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அந்த வகையிலேயே குப்பைகளை எடை போடும்படி, பணியாளர்களுக்கு, ஆணையாளர் உத்தரவிட்டார்.
இந்த புதியமுறையைத் தொடர்ந்து, குப்பைகளைக் கொண்டு செல்லும், அனைத்து வாகனங்களுக்கும், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, ஸ்கேனர் மூலம் ஸ்கேன் எடுக்கப்பட்டு, 45 செகண்ட்களுக்குள் கேமிரா மற்றும் கணிணி மூலம் எடைகள், ஆட்டோமேட்டிக்காக பதிவு செய்யப்படுகிறது.
இது தொடர்பான அனைத்து தகவல்களும் ஆணையாளருக்கும், அலுவலர்களுக்கும் “மொபைல் ஆப்” மூலமாக, பார்க்கும் வசதியும் ஏற்படுத்தப்படுத்தப் பட்டு உள்ளன. ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள “சோலார் சிஸ்டம்” முறையினையும், ஆணையாளர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுப்பணிகளின் போது, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், மாநகர் நல அலுவலர் பொறுப்பு வகிக்கும் டாக்டர் ராணி, உதவி பொறியாளர்கள் சிவ சுப்பிரமணியன், மனோகரன், சுகாதார அலுவலர் முருகன் உட்பட, பலர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்.
