சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரரான மகேந்திர சிங் தோனி நீண்ட இடைவெளிக்கு பின் தனது ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். தோனியின் பிரத்யேக ஸ்டைலிஸ்ட்டான ஆலிம் ஹக்கிம், அவரின் புதிய ஹேர்ஸ்டைலுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியல் இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ளது. இம்முறை இந்திய அணியில் இடம்பிடித்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட இந்திய வீரர்களை அணிகள் அன்-கேப்ட் வீரர்களாக தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தோனி, சந்தீப் சர்மா, பியூஷ் சாவ்லா, மோகித் சர்மா உள்ளிட்ட வீரர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இதன் மூலமாக அனைத்து அணிகளும் ரூ.4 கோடிக்கு இவர்களை தக்க வைக்க முடியும். ஆனால் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. குறைந்த தொகைக்கு தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே சிஎஸ்கே அணி நிர்வாகம், இந்த விதிமுறையை மீண்டும் கொண்டு வர பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்தது.
அதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தோனி தக்க வைக்கப்படுவாரா என்ற கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், தோனி இதுவரை எந்த தகவலும் எங்களுக்கு அளிக்கவில்லை. ஆனால் விரைவில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே தோனி மீண்டும் ஃபிட்னஸ் உடன் இருக்க உடற்பயிற்சியை தொடங்கியது தெரிய வந்தது. அதேபோல் மெகா ஏலத்தை முன்னிட்டு இன்னும் ஒரு வாரத்தில் சென்னைக்கு வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியது. இதனால் ரசிகர்களுக்காக கடைசியாக ஒரு சீசனில் தோனி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் ரசிகர்களுக்கான நீண்ட ஹேர்ஸ்டைலுடன் தோனி களமிறங்கியது பலருக்கும் நாஸ்டால்ஜியா உணர்வை கொடுத்தது. ஏனென்றால் தோனி சர்வதேச கிரிக்கெட் விளையாடிய காலத்தில் அந்த ஹேர்ஸ்டைலுடன் தான் அறிமுகம் செய்யப்பட்டார். ரசிகர்களுக்காக மீண்டும் அந்த ஹேர்ஸ்டைலுடன் விளையாடினார். அதேபோல் ஹேர்ஸ்டைலுடன் தான் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தோனி காணப்பட்டார்.
இந்த நிலையில் தோனி தற்போது புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறி இருக்கிறார். தனது பிரத்யேக ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிமிடம் முடியை திருத்தி கொண்டுள்ள தோனி, ஹாலிவுட் ஹீரோக்களுக்கே சவால்விடும் வகையில் மாறியுள்ளார். நீண்ட முடியை திருத்தி கொண்டுள்ள தோனியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.