தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் அருகே ஆயுள் தண்டனை குற்றவாளி தலைமைறைவு ஆனதால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த தென்காசி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவப்பட்டி கிராமத்தில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பாதுகாவலராக பணிபுரிந்த ராமராஜ் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில்
விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அஞ்சல், டி.கரிசல்குளம் தொம்பைகுளம் ரோட்டில் வசிக்கும் சீனிவாசன் மகன் ஜானகிராமன் (எ) சிவா (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜானகிராமன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சோனு (எ) குன்வர்லால் லாச்சன்சிங் யாதவ், நரேந்திரபால்சிங் (எ) ராஜேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜானகிராமன் (எ) சிவா தலைமறைவானார்.திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது ஜானகிராமன் ஆஜராகவில்லை. இதனால் மற்ற இருவர் மீதான வழக்கு தனியே பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சோனு (எ) குன்வர்லால் லாச்சன்சிங் யாதவ், நரேந்திரபால்சிங் (எ) ராஜேஷ் ஆகிய இருவருக்கும் ஆயள் தண்டனை விதித்து கடந்த 20.03.2023 அன்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இந்நிலையில் ஜானகிராமன் மீதான வழக்கு தென்காசி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இவ்வழக்கில் ஜானகிராமன் ஆஜராகாமல் தலைமைறைவாகவே இருந்து வருகிறார். இதனால் அவரை தேடப்படும் குற்வாளியாக அறிவிக்க வேண்டி திருவேங்கடம் போலீசார் தென்காசி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இதனை விசாரணை செய்த நீதிபதி ராஜவேல் திருவேங்கடம் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமைறைவான ஜானகிராமன் (எ) சிவாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டார். மேலும் ஜானகிராமன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
