செப் 07 : உடுமலை
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் பகுதி கிராமங்களில் கால்நடைகளின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.விவசாய விளைபொருட்களுக்கு போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திணறி வரும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.மேலும் விவசாய நிலங்கள் இல்லாதவர்களும் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பயன்பெறும் வகையில்,கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட பணியாளர்களைப் பயன்படுத்தி குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.இதுதவிர கால்நடை மருத்துவமனைகளிலும் இதுபோன்ற குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால் இந்த தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்படாமல் பயன்பாடற்றுக் கிடக்கிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது’கிராமப்புறங்களில் உள்ள மந்தைப் புறம்போக்கு உள்ளிட்ட மேய்ச்சல் நிலங்கள் பலவும் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு விட்டன.
மழைப் பொழிவு இல்லாததால் மீதமிருக்கும் மேய்ச்சல் நிலங்களும் பசுமையைத் தொலைத்து வறண்டு கிடக்கின்றன.இதனால் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள் உணவு தேடி நீண்ட தூரம் பயணிக்கின்றன.பசும்புற்கள் உணவாகக் கிடைத்தால்,அவற்றுக்குத் தேவையான நீர்ச்சத்து ஓரளவு கிடைக்கும். ஆனால் வறண்ட புற்களையே உணவாக்கிக் கொள்ளும் நிலை உள்ளதால், கால்நடைகள் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு தண்ணீர் தேடி அலைகின்றன.
குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டு கிடக்கும் நிலையில் தண்ணீர் கிடைப்பது அரிதாகி விடுகிறது.உரிய நேரத்தில் தண்ணீர் போதிய அளவில் குடிக்காவிட்டால் கால்நடைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும்.எனவே கால்நடைகளுக்கான குடிநீர்த் தொட்டிகளில் தினசரி சுத்தமான தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது கால்நடைகளுக்கு மட்டுமல்லாமல் தெரு நாய்கள்,பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் தாகம் தீர்க்க உதவும்’என்று விவசாயிகள் கூறினர்.
