திருப்பூர் : செப்டம்பர்.10
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆராய குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 1962 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் தொடங்கப்பட்டது. இந்த ஆலை தினசரி 1,250 மேற்பட்ட டன் மற்றும் ஆண்டுக்கு சுமார் 2.14 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது. இந்த ஆளை வளாகத்தில் தினசரி 55 ஆயிரம் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட எரி சாராய உற்பத்தி ஆலை 30 ஆயிரம் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட எத்தனால் ஆலயம் செயல்பட்டு வருகிறது. ஆலையின் அரவைக்கு போதுமான கரும்பு இல்லாத காரணத்தினாலும், 60 ஆண்டுகள் பழமையான இயந்திரங்களால் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக கடந்த 2023 – 24 ஆம் ஆண்டு அரவை பருவம் முதல் தற்காலிகமாக ஆளை இயங்காமல் இருந்து வருகிறது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் புனரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வலுத்து வந்தது. சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சரிடம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புரனமைத்து மீண்டும் இயக்க வேண்டுமென விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஆலையை மீண்டும் இயக்குவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து பரிந்துரை செய்ய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து தற்போது சர்க்கரைத் துறை இயக்குனர் தலைமையில் சர்க்கரை துறை கூடுதல் இயக்குனர் , தொழில்நுட்பம் சார்ந்த அலுவலர்கள் , தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் , கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆகியோரை உள்ளடக்கிய 10 பேர்களைக் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் குழு ஆலையை ஆய்வு செய்து விவசாயிகள் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரது கருத்துக்களையும் கேட்டறிந்து அரசுக்கு உரிய அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணை வெளியிட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
