கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தரவுள்ள நிலையில், அவரை வரவேற்க நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள ஒரு ‘பிரம்மாண்ட’ ஏற்பாடே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முதல்வரின் பயண வழித்தடங்களில் உள்ள தனியார் காலி மனைகளைத் தேடிப்பிடித்து, ஆளுயரத் திரைகளால் மூடும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குஜராத் மாநிலத்துக்கு வந்தபோதும், 2023 ஆம் ஆண்டு டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற்றபோதும், வெளிநாட்டு தலைவர்களின் பார்வைக்கு ஏழ்மை தெரியக் கூடாது என்பதற்காக குடிசைப்பகுதிகளைத் திரைகளால் மறைத்தது ‘மோடி அரசு’. அப்போது அந்தச் செயலைக் கடுமையாக விமர்சித்தவர்கள் ‘திராவிட மாடல்’ ஆட்சியாளர்கள். ஆனால் இன்று அதே ‘மோடி மாடல்’ உத்தியை, முதல்வர் வருகைக்காக நாகர்கோவிலில் ஆளுங்கட்சியினரே கையில் எடுத்திருப்பது நெட்டிசன்களுக்கு பேசுபொருளாக அமைந்துள்ளது.
“குடிசைகளை மறைத்தது குஜராத் மாடல் என்றால், காலி மனைகளுக்கு முக்காடு போடுவதுதான் திராவிட மாடலா?” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.

இந்தச் சம்பவத்தில் மேயர் மகேஷ் தலைமையிலான நாகர்கோவில் மாநகராட்சியின் செயல்பாடுகள் அடுக்கடுக்கான கிண்டல் கேள்விகளையும், அதேசமயம் தீவிரமான நிர்வாகக் கேள்விகளையும் எழுப்பியுள்ளன. “முதல்வரின் கண்ணில் காலி மனைகள் பட்டால் அவர் என்ன அதிர்ச்சி அடையப் போகிறார்? அல்லது காலி மனைகளைப் பார்த்தால் மாநிலத்தின் வளர்ச்சி குறைந்துவிட்டதாக நினைத்துக்கொள்வாரா?” என்று பொதுமக்கள் தரப்பில் நகைச்சுவையுடன் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு தனிநபருக்குச் சொந்தமான தனியார் காலி மனைகளை மறைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி என்பது குடிநீர், சுகாதாரம், குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைப்பது போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து தனியார் இடங்களுக்கு ‘கவர்’ போடுவதற்காகப் பொது நிதியை பயன்படுத்துவது தணிக்கை விதிகளுக்கு முரணானதாகும்.
ஒட்டுமொத்த நகரத்தையும் அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் காலி மனைகளுக்கு மட்டும் ‘ஸ்கிரீன்’ போடும் மாநகராட்சியின் இந்த ஏற்பாடு முதல்வரின் கவனத்திற்குச் சென்றால், அவர் இதை பாராட்டுவாரா அல்லது மேயரை கடிந்துகொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
