Headlines

ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

ஜீவ சமாதியான குடிநீர் கிணறு… ஜொலிக்கும் விளக்குகளுக்கு நடுவே தாகத்தில் தவிக்கும் மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு மேல பெருவிளை பகுதியில் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்த பழமையான கிணறு, “புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும்” என்ற வாக்குறுதியுடன் அதிகாரிகளால் மண்ணால் மூடப்பட்டு, இன்று ஜீவ சமாதியாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேறாமல் மாதங்கள் கடந்தும் புதிய குடிநீர் வசதி ஏற்படுத்தப்படாததால், அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர்.

வீட்டு குடிநீர் இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ற குடிநீர் ஆதாரங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இதன் விளைவாக, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, அதுவும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் அளவிற்கே தண்ணீர் கிடைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்த குறுகிய நேரத்திலும் மின்சாரத் தடை, மோட்டார் பழுது போன்ற காரணங்களால் தண்ணீர் விநியோகம் தாமதமாகி, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மாநகராட்சியின் 52 வார்டுகளிலும் மாதாந்திர குடிநீர் கட்டணம் ரூ.30 முதல் ரூ.53 வரை மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், 3-வது வார்டு மக்கள் ரூ.130 வரை வரி செலுத்தியும் அடிப்படை குடிநீர் வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் குற்றம் சாட்டுகின்றனர்.

இதே 3-வது வார்டு எஸ்.எஸ்.நகர் பகுதியில் இரவெல்லாம் ஜொலிக்கும் உயர்மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அதே வார்டின் மற்றொரு பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடும், சாலை வசதி இல்லாத நிலையும் தொடர்கிறது.

“ஆடம்பர மின் விளக்குகளை அமைக்கத் தெரிந்த நிர்வாகத்தால், மக்களின் அடிப்படை உரிமையான குடிநீர் மற்றும் சாலை வசதியை ஏற்படுத்த முடியவில்லையா?” என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

“ஜொலிக்கும் விளக்குகளே வளர்ச்சியின் அடையாளமா?
அல்லது தண்ணீர் இல்லாத வீடுகளே உண்மையான ஆட்சி நிலவரமா?”
என்ற கேள்வியுடன், உடனடி நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *