திருநெல்வேலி,அக்.15:-
வடகிழக்குப் பருவமழையைக் கருத்திற்கொண்டு, திருநெல்வேலி மத்திய மாவட்டம், கங்கைகொண்டான் “சிப்காட்”வளாகத்தில் அமைந்திருக்கும் “பள்ளக்குளம்” கண்மாய் கரையில், பனை விதைகள் நடவு செய்யும் பணிகள், இன்று (அக்டோபர். 15)காலையில் நடைபெற்றன.
திருநெல்வேலி பயிற்சி உதவி ஆட்சியர் தவலேந்து, முதன் முதலாக சில பனை விதைகளை நடவு செய்து, இந்த நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பாரம்பரிய மரங்களான பனை மரங்களை, கண்மாய்கள், ஏரிகள், ஊரணிகள் போன்றவற்றின் கரையோரங்களில் வளர்ப்பதன் மூலம், நீர்நிலைகளின் ஆதாரங்கள், நிலையாக பாதுகாக்கப்படும்.
இதன் அடிப்படையில், நமது நெல்லை மாவட்டத்தில், நடப்பு 2025-26 நிதியாண்டில், மாவட்டம் முழுவதுமாக மொத்தம் 5 லட்சம் பனை விதைகளை நடவு செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இப்பணிகள், பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், அரசுசாரா தன்னார்வத் தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் மூலம், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன!”-என்று, குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “சிப்காட்” வளாக குளக்கரையில் நடைபெற்ற, பனைவிதைகள் நடவு செய்யும் பணிகளில், கங்கை கொண்டான் “நம்ம ஊரு”குளோபல் ஸ்கூல் மாணவ, மாணவிகள், கங்கை கொண்டான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தாழையூத்து சங்கர் நகர் ஜெயேந்திரா பொன்விழா CBSE மாணவ, மாணவிகள், சங்கர் பாலிடெக்னிக மாணவர்கள் என, 300-க்கும் மேற்பட்டோருடன், “மகாத்மா காந்தி” தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித்திட்ட பணியாளர்களும், ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இளங்கோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் சரவணன், சிப்காட் திட்ட அலுவலர் மாரிமுத்து, மாவட்ட வனச்சரகர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் பெலிக்ஸ் பிரான்சி ஆகியோர் உட்பட, பலரும் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் – “மேலப்பாளையம்” ஹஸன்
