திருநெல்வேலி,ஜன.8:-மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், இம்மாதம் [ ஜனவரி ] 11-ஆம் தேதிமுதல், 15-ஆம் தேதி வரையிலும்,மொத்தம் 5 நாட்களுக்கு, அகில இந்திய அளவிலான “சைக்கிள் போலோ சேம்பியன்சிப்” போட்டிகள், நடைபெறுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்கிற, “தமிழக சைக்கிள் போலோ சங்கம்” அணியில், திருநெல்வேலி மாவட்டம் பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 9-ஆம் வகுப்பு மாணவர் V.இசக்கிதுரை மற்றும் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர் ரெனிவேல் ஆபிரகாம் ஆகியோர் “சப்- சீனியர்” பிரிவிலும், அதே பள்ளியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவர் பெனிவேல் கிறிஸ்டோபர் “சீனியர்” பிரிவிலும், இடம் பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள, இந்த வீரர்கள் மூவரையும், வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி, நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, மூன்று வீரர்களுக்கும் “பொன்னாடை” அணிவிக்கப்பட்டன. அத்துடன், அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட போலோ சங்க செயலாளர் முனைவர் வெ.பெரியதுரை, நிர்வாகக்குழு உறுப்பினர் டி. ஹில்டா பொன்மணி, மாவட்ட டென்னிஸ் கிரிக்கெட் சங்க செயலாளர் இசக்கி முத்து,பொருளாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், கலந்து கொண்ட னர்.*
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.