திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள வ.உ.சி மத்திய பேருந்துநிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற பழனி மத்திய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட பூங்காவானது பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்றது. பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது நகராட்சி கட்டுப்பாட்டில் உளள வ உ சி பூங்காவை பராமரிப்பு பணிக்காக பழனி அரிமா சங்கம் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் வசம் ஒப்படைக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பழனி சார் ஆட்சியர் கிஷன் குமார் பங்கேற்று அரிமா சங்க நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து இன்றுமுதல் பூங்காவில் பராமரிப்பின்றி உள்ள மணிக்கூண்டு, செயற்கை நீரூற்று, உயர்கோபுர மின்விளக்குகள், அமரும் இருக்கைகள் மற்றும் மரங்கள் மற்றும் கார செடிகள் ஆகியவற்றை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செபாஸ்டியன், சுதா மதியழகன், மற்றும் பழனி நகர அரிமா சங்க நிர்வாகிகள், நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பழனி செய்தியாளர் : நா.ராஜாமணி