செப் 17 கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறை மீனவ கிராமத்தில் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து அங்குள்ள குடியிருப்புகள் அருகே கொட்டப்பட்டு வந்ததாக உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டித்த மக்கள், மருத்துவக் கழிவுகளை அப்பகுதியில் அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மக்களுடன் பேசி சமாதானப்படுத்தினர்.
மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிமேல் இப்படியான செயல்கள் நடைபெறாது என அதிகாரிகள் உறுதி அளிக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
