தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு திருத்தேரின் வடம்பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தார்! திருநெல்வேலி,
ஜூலை.8:-
தமிழ்நாட்டில் பாடல்பெற்ற 14 சிவத்திருத்தலங்களுள் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்- அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் புகழ்பெற்ற திருவிழாவாகிய “ஆனிப்பெருந்திருவிழா” சென்ற மாதம் [ஜூன்] 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.9-ஆம் நாள் திருநாளான இன்று [ஜூலை.8] காலையில், இத்திருக்கோவிலின் 519-ஆண்டு தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழக “இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்” பி.கே.சேகர்பாபு, “சபாநாயகர்” மு.அப்பாவு முன்னிலையில், முதன்முதலாக திருத்தேரின் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

அருள்மிகு சுவாமி நெல்லையப்பர், திருத்தேரில் வீற்றிருந்தபடியே, நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வந்து, அங்கு குழுமியிருந்த திரளான பக்தர்களுக்கு “திருக்காட்சி” தந்து, “திருவருள்” பாலித்தார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.சுகுமார், நெல்லை மாநகராட்சி ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான மோனிகா ராணா, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ், தமிழக பா.ஜ.க.தலைவரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை மு.அப்துல் வகாப், நாங்குநேரி “ரூபி” ஆர்.மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராம கிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் உட்பட, ஆண்- பெண் பக்தர்கள் திரளாக பங்கேற்று, மிகுந்த உற்சாகத்துடனும், பயபக்தியுடனும் திருத்தேரினை இழுத்து வந்தனர்.
அப்போது அவர்கள் சிவ, சிவா! என்றும், தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி! என்றும், வழி நெடுகிலும் “பக்தி கோஷங்கள்” போட்டபடி வந்தனர்.450 டன்கள் எடையும், அலங்கரிப்பதற்கு முன்பாக 65 அடி உயரமும், அலங்கரித்ததற்கு பின்பு 85 அடி உயரமும் கொண்ட, நெல்லையப்பர் தேரானது, திருவாரூர், ஸ்ரீ வில்லிப்புத்தூர் தேர்களுக்கு அடுத்த படியாக, தமிழ்நாட்டின் 3-வது பெரிய தேர் திருநெல்வேலி தேர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தேரோட்டத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும், இன்று [ஜூலை.8] “உள்ளூர் விடுமுறை” விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
