கன்னியாகுமரி, பிப்ரவரி 6:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான குளங்களில் தாமரைப் பூ பறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் ஏழைத் தொழிலாளர்களை ரவுடிக் கும்பல் மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறிப்பதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் தேரேகால்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், தேரூர் மாணிக்கபுத்தேரி குளத்தில் தாமரைப் பூ பறித்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். கடந்த ஆறு மாதங்களாக, சிறையில் உள்ள தண்டனை கைதிகளின் தூண்டுதலின் பேரில், இளங்கடை புத்தன்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் தனது அடியாட்களுடன் சேர்ந்து தொழிலாளர்களை தாமரைப் பூ பறிக்க விடாமல் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சமூக விரோதக் கும்பலின் அராஜகம் எல்லை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. ஈத்தங்காடு பகுதியில் பூ பறித்துக் கொண்டிருந்த ஐயப்பனின் தந்தையை ரவுடிகள் தாக்கி விரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுமட்டுமின்றி, அந்தக் குளத்தை பல லட்ச ரூபாய்க்கு வேறு ஒருவருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு விட்டுத் தொகை பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த ஜனவரி 21ஆம் தேதி, தேரூரைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் 10க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து, ஐயப்பனை நேரில் சந்தித்து, “தொழில் செய்ய வேண்டுமானால் ரூ.5,00,000 கொடுக்க வேண்டும்” என மிரட்டி விரட்டியதாக கூறப்படுகிறது.
இத்தனை அத்துமீறல்கள் நடந்தும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் இதுகுறித்து தென்தாமரைக்குளம் மற்றும் சுசீந்திரம் காவல் நிலையங்களில் முறைப்படி புகார் அளித்துள்ளார் (CSR எண்: 364/2025 மற்றும் 0084/26). இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுசீந்திரம் காவல் ஆய்வாளர், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, குளத்தை இரு பகுதியாகப் பிரித்து சமரசமாக தொழில் செய்யுமாறு வாய்மொழியாக கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், “இது வனத்துறை கட்டுப்பாட்டில் வரும் குளம்” என்று கூறி பொறுப்பைத் தவிர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்தே தேரூர் பகுதியில் உள்ள மூன்று குளங்கள் ரவுடிகளால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ ஆதாரங்கள் காட்டப்பட்டும் அதிகாரிகள் மௌனம் காப்பதாக கூறப்படுகிறது.
தனது உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் இருக்கும் ஐயப்பன், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பியுள்ளார்.
அரசு நீர்நிலைகளில் ரவுடிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி, ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்கப் போகிறது என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
