Headlines

பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

பழனி அருகே சினையாடு திருடி கொன்ற நபர் கைது: இருசக்கர வாகனத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

பழனி, ஜூலை 29:

பழனி அருகே வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த சினையாட்டைத் திருடிச் சென்று கொன்ற நபரை, ஆட்டின் உரிமையாளர் அவரது தம்பியுடன் சேர்ந்து துரத்திப் பிடித்து ஆயக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பூலம்பட்டி அஞ்சல், வேப்பன்வலசு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன் (36). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், தனது வீட்டில் 2 வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.

நேற்று (ஜூலை 28) இரவு சுமார் 09.00 மணியளவில், வீட்டின் முன்புள்ள வேப்பமரத்தில் ஆடுகளைக் கட்டிவைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இன்று (ஜூலை 29) அதிகாலை 03.15 மணியளவில் ஆடுகள் சத்தம்போடவே, கேப்டன் பிரபாகரனும் அவரது மனைவி புவனேஸ்வரியும் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது கட்டப்பட்டிருந்த ஆடுகளில் சினையாக இருந்த செவலை நிற வெள்ளாடு ஒன்று காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

அப்போது பொருளுர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டின் சத்தம் கேட்கவே, கேப்டன் பிரபாகரன் தனது தம்பி பிரதாப் என்பவரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். பொருளுர் சாலையில் கள்ளிமந்தயம் அருகே சென்றபோது, TN 75 BE 9032 (Hero Splendor) என்ற இருசக்கர வாகனத்தின் முன்புறம் ஆடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்திய நபரிடம் விசாரித்தபோது, அவர் கோட்டத்துரை கல்துறையைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் மகன் ஜெயராஜ் எனத் தெரியவந்தது.

சத்தம் போடாமல் இருப்பதற்காக ஆட்டின் கழுத்து கயிற்றை இறுக்கியதில், அந்தச் சினையாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தது.

இதையடுத்து, ஆட்டைத் திருடி கொன்ற ஜெயராஜை பிடித்து, உயிரிழந்த ஆடு மற்றும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்துடன் ஆயக்குடி காவல் நிலையத்தில் கேப்டன் பிரபாகரன் ஒப்படைத்தார்.

இச்சம்பவம் குறித்து ஆயக்குடி காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு (குற்ற எண்: 286/2026, u/s 303(2), 325 BNS) செய்துள்ளார். இதுகுறித்து ஆய்வாளர் ராஜேஷ் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *