கன்னியாகுமரி, அக்டோபர் 8:
சரக்கல்விளை பிரியா நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (IOB RSETI) புதிய வளாகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, அவர்களை சுயதொழில் மற்றும் தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்கில் RSETI செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நாகர்கோவில் பால்பண்ணை அருகே அனீஃபா நகரில் இயங்கி வந்த மையம், தற்போது ‘RSETI 2.0’ திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட உள்ளது.
புதிய மையத்தில் இரண்டு ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம், செய்முறைப் பயிற்சிக்கான பட்டறைகள், ஆண் மற்றும் பெண் பயிற்சியாளர்களுக்கான தனித்தனி தங்குமிடங்கள், உணவகம் மற்றும் மின்தூக்கி வசதிகள் இடம்பெற்றுள்ளன.

செல்போன் பழுதுபார்த்தல், அழகுக்கலை, ஆரி வேலைப்பாடு, தையல், இருசக்கர வாகனப் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. புதிய வளாகம் அக்டோபர் மாத இறுதிக்குள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
முன்னதாக வைத்தியநாதபுரம் நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தை ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் பொருட்கள் சரியான எடையிலும் தரத்திலும் வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
தமிழக விடியல் செய்திகளுக்காக
குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.
