திருப்பூர்:
நிலம் தொடர்பான வழக்கை முடித்துத் தருவதாகக் கூறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஒருவர் ரூ.60 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சகோதரர்களான சுப்பிரமணி , வேலுசாமி ஆகிய இருவர் பரபரப்பு புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன்கள் வேலுசாமி மற்றும் சுப்பிரமணி. இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கடந்த 1970-ம் ஆண்டு எங்களது தந்தை வாங்கிய நிலத்தை, செல்லமுத்துக் கவுண்டர் என்பவர் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து ஏமாற்றிவிட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தும் எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், எனது மகன் ஸ்ரீ விக்னேஷும், சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி (டிஎஸ்பி) எஸ். ஈஸ்வரமூர்த்தியின் மகனும் ஒரே கல்லூரியில் படித்ததன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது இந்த நில வழக்கு குறித்து என் மகன் அவரிடம் பேசியுள்ளான். இதையடுத்து, இந்த வழக்கை முடித்துத் தருவதாக டிஎஸ்பி ஈஸ்வரமூர்த்தி எங்களிடம் உறுதியளித்தார்.
இதற்காக எங்களை சென்னைக்கு அழைத்துச் சென்று வழக்கறிஞர்களிடம் பேசிய அவர், வழக்கை முடிக்க ரூ.1 கோடியே 20 லட்சம் செலவாகும் என்றும், முன்பணமாக ரூ.60 லட்சம் தருமாறும் கேட்டார். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு கிருஷ்ணகிரியில் அவர் பணியாற்றியபோது, முதல் தவணையாக ரூ.30 லட்சத்தை நேரில் வழங்கினோம். அடுத்த 6 மாதங்களில் எங்களது மற்றொரு நிலத்தை விற்று, மீதமுள்ள ரூ.30 லட்சத்தையும் அவரது வீட்டில் சென்று கொடுத்தோம்.
ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர் வழக்கை முடித்துத் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். நாங்கள் நேரில் சென்று பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, ‘கொரோனா காலகட்டத்தில் வழக்கு தாமதமானதால் கொடுத்த பணம் செலவாகிவிட்டது’ எனக் கூறி ஏமாற்றிவிட்டார்.
வயதான காலத்தில் எங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு எங்களது நிலத்தையும், நாங்கள் ஏமாந்த ரூ.60 லட்சம் பணத்தையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால், குடும்பத்துடன் தீக்குளிப்பதைத் தவிர வேறு வழியில்லை.” இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரி மீது ரூ.60 லட்சம் மோசடி புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
