நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா, குட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுமண்டலம் கிராமத்தில் உள்ள மூங்கில் குளம் கடுமையான ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள சுமார் 21 குளங்கள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. கரந்தமலையிலிருந்து குளங்களுக்கு வரும் பிரதான நீர் வழித்தடங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் நீர், குளங்களை வந்தடையாமல் வீணாக விரையமாகிறது.
இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர் வழித்தடங்களைச் சீரமைத்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்திற்கும் குடிநீருக்கும் வழிவகுக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சனை குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் (DRO), நத்தம் வட்டாட்சியர் (Tahsildar), நீர்வளத்துறை செயற்பொறியாளர் (PWD Engineers), நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மற்றும் குட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீர்வள ஆதாரங்களையும் வரத்து வாய்க்கால்களையும் பாதுகாத்து, வரவிருக்கும் மழைக்காலத்திற்குள் குளங்களில் தண்ணீரைத் தேக்குவதற்கு ஏதுவாக உடனடியாக தூர்வாரும் பணிகளையும், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
துணை ஆசிரியர் : நா.ராஜமணி – 8973350663.
