பழனி, ஜூலை 29:
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலமாக மோசடியாகப் பத்திரம் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள கோவில் நில மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி. (CBCID) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நில ஆவண மோசடி வழக்கில் ஏற்கனவே வெள்ளைத்துரை (60), முருகதாஸ் (56) மற்றும் அன்வர்தீன் (65) ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், பழனி அருகே உள்ள டி.கே.என். புதூரைச் சேர்ந்த சேதுபதி என்பவருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதன் மூலம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) புதிய சட்டப் பிரிவுகள் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நில மோசடி பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், ஆவணப் பதிவில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணை ஆசிரியர் : நா.ராஜாமணி – 8973350663
