Headlines

சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சாதிவாரி கணக்கெடுப்பில் குளறுபடிகளைத் தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

சென்னை:
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் எந்தவித குளறுபடிகளுக்கும் இடம் தராமல் துல்லியமாக நடத்தப்பட வேண்டும் என்றும், ஓபிசி (OBC) மக்களின் சமூகநீதி உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

​இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
​தற்போது நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் சாதி விவரங்களைப் பதிவு செய்ய முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட பட்டியல் இல்லாமல், நேரடியாக அவர்கள் கூறும் பெயரையே பதிவேற்றும் ‘open-ended format’ முறையை ஒன்றிய அரசு பயன்படுத்தப் போவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஓபிசி பட்டியலில் இருப்பது வகுப்புகளே தவிர சாதிகள் அல்ல என்று ஒன்றிய அரசு கூறும் விளக்கம் முற்றிலும் ஏற்புடையது அல்ல.

​பொதுமக்கள் கூறும் பெயர்களை அப்படியே பதிவேற்றினால், இந்தியாவில் 46 லட்சத்திற்கும் அதிகமான சாதிகள் இருப்பதாக தவறான கணக்கு உருவாகும் அபாயம் உள்ளது. இதனால், கணக்கெடுப்புக்காகச் செலவிடப்படும் சுமார் ₹12,000 கோடி நிதியும், லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் உழைப்பும் வீணாகிவிடும்.

​ஒவ்வொரு மாநில அரசும் தயாரித்து வைத்துள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலைச் சேகரித்து, கணக்கெடுப்பு அமைப்பில் பதிவேற்றி, அதில் உள்ள சாதிகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் ஓபிசி மக்களின் உண்மையான எண்ணிக்கையும், அவர்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார நிலையும் தெரியவரும்.

​எனவே, இந்த முறைகேடுகளைத் தவிர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பின் உண்மையான நோக்கம் நிறைவேற ஒன்றிய அரசு உடனடியாகத் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் உணர்வுகளையும், கோடானுகோடி மக்களின் சமூகநீதி உரிமையையும் வெளிப்படுத்தும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு இதுதொடர்பாகச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *