Headlines

பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

பழனி அருகே அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் அனுமதியை மீறி மண் கடத்தல்: நிலத்தடி நீர் மற்றும் பறவைகள் சரணாலயம் பாதிக்கும் அபாயம்

தமிழக அரசு விவசாய பயன்பாட்டிற்காக குளங்களில் மண் அள்ள அனுமதி வழங்கி வருகிறது. இதற்காக விவசாய நிலத்திற்கான சிட்டா, அடங்கல் போன்ற ஆதாரங்களுடன் பொதுப்பணித்துறைக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, டிராக்டர்கள் மூலம் இலவசமாக மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பழனி அருகே உள்ள அய்யம்பாளையம் கோதையம்மன் குளத்தில் இந்த அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் சில அதிகாரிகளின் உதவியோடு மண் மாபியாக்கள் சட்டவிரோதமாக மண் கடத்தி வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஜே.சி.பி, ஹிட்டாச்சி போன்ற கனரக இயந்திரங்களைக் கொண்டு, நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில் நாள்தோறும் பல ஆயிரம் லோடு மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாகக் குறைந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

மேலும், இந்த குளத்தின் கரையில் உள்ள பழமையான மரங்களில் ஆண்டுதோறும் சீசன் காலத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்வது வழக்கம். தற்சமயம் கனரக வாகனங்களின் இயக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற மண் தோண்டுதலால், இந்த மரங்கள் வேரோடு சாய்ந்து அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இது அப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பெரிதும் பாதித்துள்ளது.

விவசாயிகளின் பெயரில் நடக்கும் இந்த சட்டவிரோத மண் கடத்தலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், இயற்கை வளங்களையும் பறவைகளின் வாழ்விடத்தையும் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *