Headlines

திண்டுக்கல் மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காகவா அல்லது மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வசதிக்காகவா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களின் நலனுக்காகவா அல்லது மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வசதிக்காகவா என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே பலத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கழிவுநீர் வடிகால், சாலை அமைத்தல், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பெரும்பாலான இடங்களில் பணிகள் முறையாக திட்டமிடப்படாமலும், போதிய தரமின்றியும் நிறைவேற்றப்படுவதாக பொதுமக்கள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, திண்டுக்கல் மாநகராட்சியின் 44-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி முருகன் கோவில் தெருவிலுள்ள 40 அடி சாலையில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடைப் பணிகள் முடிந்த பின்னரும், சாலைகள் முறையாகச் சீரமைக்கப்படவில்லை. மேலும், இங்கு கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் சரிவர செய்யப்படாததால், கழிவுநீர் தடையின்றிச் செல்லாமல் தேங்கி நிற்பதோடு, சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் புகுந்து வருகிறது. பொதுமக்கள் கழிவுநீரைக் கையில் அள்ளி ஊற்றும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மழைநீரும் வடிகால்களில் கலக்க முடியாமல் சாலைகளிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் நோய் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.

பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சாலையோரங்களில் தேங்கிக்கிடக்கும் மணல் மேடுகள், மண் குவியல்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. இதோடு, புதிய சாலை மட்டம் முன்பை விட சுமார் மூன்று அடி வரை உயர்த்தப்பட்டுள்ளதால், இருபுறமும் உள்ள வீடுகள் பள்ளமான பகுதிக்குச் சென்றுவிட்டன. இதன் காரணமாக, மழைக்காலங்களில் மழைநீரும் கழிவுநீரும் வீடுகளுக்குள் எளிதாகப் புகுந்து விடுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் தினசரி நடமாட்டத்திற்குப் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தையும், அவை பொதுமக்களுக்குப் பயனளிக்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பொறியாளர்களுக்கு உண்டு. ஆனால், அதிகாரிகளின் போதிய கண்காணிப்பு இல்லாததால், ஒப்பந்ததாரர்கள் தங்களுக்கு சாதகமான முறையில் பணிகளை அரைகுறையாக மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்கள் உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவா அல்லது ஒப்பந்ததாரர்களின் லாபத்திற்காகவா என்ற ஆதங்கம் மக்களிடையே எழுந்துள்ளது.

அதேவேளையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள இதுபோன்ற அடிப்படைப் பிரச்சினைகளை நேரில் சென்று ஆய்வு செய்து, மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வுகாண வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் குரலாகச் செயல்பட வேண்டிய பிரதிநிதிகள் பல இடங்களில் அமைதி காப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மற்றும் துறை சார்ந்த பொறியாளர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட 44-வது வார்டு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். கழிவுநீர் வடிகால்களின் மட்டத்தைச் சரிசெய்து, மணல் மேடுகளை முழுமையாக அகற்றி, தரமான முறையில் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பணிகள் குறித்து தொழில்நுட்ப ரீதியான ஆய்வு நடத்தி, குளறுபடிகளுக்குக் காரணமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *