Headlines

பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

பெண்களின் கழிப்பறைக்குப் பூட்டு; ஆண்களின் கழிப்பறை குப்பைக் கிடங்கு! கொடைக்கானலில் துர்நாற்றம் வீசும் கழிப்பறைகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி!

முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் ஏரிப் பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பின்றி, சுகாதாரம் சீர்கெட்டு மூக்கைப் பொத்தும் நிலையில் காணப்படுகின்றன.

இதில் பெண்களுக்கான கழிப்பறை ‘திண்டுக்கல் சிறப்புப் பூட்டு’ போட்டுப் பொதுமக்கள் பயன்படுத்தாதவாறு பூட்டி வைக்கப்பட்டுள்ளது; ஆண்களுக்கான கழிப்பறையோ குப்பை சேகரிக்கும் கிடங்காக மாறியுள்ளது.

தரையெங்கும் மனிதக் கழிவுகள் தேங்கி, நோய்தொற்று ஏற்படும் அபாயம் தோன்றுவதுடன் கடுமையான துர்நாற்றம் வீசும் இந்த அவல நிலையைக் கண்டு, “இதைக் கட்டிய அதிகாரிகள் இந்தக் கழிப்பறையைப் பயன்படுத்துவார்களா?” எனச் சுற்றுலாப் பயணிகள் கொந்தளிக்கின்றனர்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கழிப்பறைகளைக் கட்டிவிட்டு, அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாதபடி பூட்டி வைப்பதும், பராமரிப்பின்றி பாழடையச் செய்வதும் எதற்காக என்ற நியாயமான கேள்வியும் எழுந்துள்ளது.

கொடைக்கானலில் உள்ள பல கழிப்பறைகள் இதே கதியில்தான் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் வலுக்கும் நிலையில், கொடைக்கானல் நகராட்சி இதற்குப் பதிலளிக்குமா அல்லது கழிப்பறைகளைக் கட்டுவது மட்டுமே தங்கள் வேலை என அலட்சியமாகக் கடந்து செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *