நாகர்கோவில், ஏப். 8:
நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தங்க நகைக் கடன் நிறுவனத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மின்னணு சாதனங்கள் முழுமையாக எரிந்து நாசமாகின.
இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
நிறுவனத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி (High tension wire) எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்துள்ளது.
அந்த அறுந்த கம்பியானது, நிறுவனக் கட்டிடத்திற்குள் செல்லும் மின்கம்பியின் மீது உரசியதில் கடுமையான மின்கசிவு ஏற்பட்டு கட்டிடத்திற்குள் தீப்பிடித்ததாகத் தெரியவருகிறது.
தீ மளமளவெனப் பரவியதில், அலுவலகத்திற்குள் இருந்த பல முக்கிய மின்னணு சாதனங்கள் முழுமையாகத் தீயில் கருகி சேதமடைந்தன.
4 குளிரூட்டிகள்,3 கணினிகள், தரவு சேவையகப் பெட்டி ஆகியன தீயில் கருகி சேதமாகின.
அதிகாலை நேரம் என்பதால் நிறுவனத்தில் பணியாளர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
