Headlines

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா பா.ஜ.க-விற்கு மட்டும் பிரத்தியேகமானதா? – மாற்று கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்வி!

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக சந்திப்பு ரவுண்டானா பா.ஜ.க-விற்கு மட்டும் பிரத்தியேகமானதா? - மாற்று கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரி கேள்வி!

நாகர்கோவில்,ஏப் 15:

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில் அமைந்துள்ள ரவுண்டானாவில் பாரதிய ஜனதா கட்சியின் கொடிகள் மற்றும் பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்று கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.

விதிமுறைகளில் பாரபட்சமா?

பொதுவாக, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற முக்கிய சந்திப்புகளில் எந்தவொரு அரசியல் கட்சியும் தங்களது கட்சிக் கொடிகளையோ அல்லது பதாகைகளையோ வைப்பதற்கு குமரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், இந்த விதிமுறைகள் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு மட்டும் தளர்த்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வருகை தரவுள்ளார்.

இதனை முன்னிட்டு, ஆட்சியர் அலுவலக சந்திப்பில் உள்ள ரவுண்டானா முழுவதும் பிரதமர் மோடி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களின் (எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரின்) கட்டவுட்கள் மற்றும் பா.ஜ.க-வின் கட்சிக் கொடிகளால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் மாற்று கட்சியினர், “விதிமுறைகள் என்பது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். மற்ற கட்சிகள் பதாகைகள் வைக்க முயலும்போது உடனடியாக தலையிட்டுத் தடுக்கும் காவல்துறை, தற்போது பா.ஜ.க-விற்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கியது? இது அதிகார துஷ்பிரயோகமா அல்லது காவல் துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையா?” என சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்தல் நேரங்களில் ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அனைத்துக் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பையும், நடுநிலையான அணுகுமுறையையும் பின்பற்ற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *