ரொக்கப் பணம் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் – நீதிமன்றக் காவலில் சிறையிலடைப்பு
பழனி:மே:19
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரட்டாறு பாலம் அருகேயுள்ள தோட்டம் ஒன்றில் பெரிய அளவில் பணப் பந்தயத்துடன் சீட்டாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவகுமார் மற்றும் காவலர் குணசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தோட்டத்தில் மறைவான ஒரு பகுதியில் பணம் வைத்து தீவிரமாக சூதாடிக்கொண்டிருந்த கும்பலை போலீசார் நாலாபுறமும் வளைத்துப் பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் செந்தில்குமார், நாகராஜ், ஆனந்தராஜ், குமார், முத்துராமன், பாண்டி மற்றும் ஆறுமுகம் ஆகிய 7 நபர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
பொருட்கள் பறிமுதல்: கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குப் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களை (மோட்டார் சைக்கிள்கள்) காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 7 நபர்களும் பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின், அவர்கள் அனைவரும் நீதிமன்றக் காவலில் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் பழனி மற்றும் பாலசமுத்திரம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
