திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை அருகில் உள்ள கணியூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்காக அரசாணையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பாக சட்டப்பேரவையில் 2021 – 2022 ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் அடிப்படையில், நகர்ப்புறத்துக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.
அந்தவகையில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜோத்தம்பட்டி ஊராட்சியை கணியூர் பேரூராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. இணைப்பு சம்பந்தமாக தொடக்கம் முதலே ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஊராட்சியின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள நூறுநாள் வேலைத்திட்டம் முடக்கப்படும் என்பது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஊராட்சி வளாகத்தில் இணைப்பு குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரை ஜோத்தம்பட்டி பொதுமக்கள் நேரில் சந்தித்து கணியூர் பேரூராட்சியுடன் ஜோத்தம்பட்டி ஊராட்சியை இணைக்க கூடாது என கோரிக்கை மனு வழங்கினர்.