திருநெல்வேலி,நவ.21:- திருநெல்வேலி மாவட்டம், அபிஷேகப்பட்டி அருகேயுள்ள, “சீதபற்பநல்லூர்” கிராமத்தில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், நேரடியாக பங்கேற்ற மக்கள் தொடர்பு முகாம், நடைபெற்றது. இங்குள்ள, “சமத்துவ புரம்” சமுதாயக்கூடத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை தோட்டக்கலைத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மகளிர் திட்டம்,சமூக பாதுகாப்புத்திட்டம்,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம்- ஆகியவற்றின் கீழ், மொத்தம் 43 பயனாளிகளுக்கு, 15 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன், ” தற்பொழுது பருவமழை காலமாக இருப்பதால், மாவட்ட மக்கள் தண்ணீரை காய்ச்சியே, பருக வேண்டும்.
தாங்கள் வசிக்கக்கூடிய இடங்களில், மழைநீர் அல்லது கழிவுநீர் போன்றவை தேங்காதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய சுற்றுப்புறங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்!”- என்று, கேட்டுக் கொண்டார். இந்த முகாமில், திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், மகளிர் திட்டத்துக்கான திட்ட அலுவலர் இலக்குவன், சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கீதா ராணி, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் அனிதா, திருநெல்வேலி தாசில்தார் மாணிக்க வாசகம், சீதபற்ப நல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஐயப்பன் ஆகியோர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்