திருநெல்வேலி,நவ.17:- தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, 23 படுக்கைகள் கொண்ட கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் பிரிவு [PAY WARDS] கட்டிடத்தையும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, அரசு மருத்துவ மனையில் பணிபுரியும் பெண்களுக்கான, அனைத்து வசதிகளும் கொண்ட, சிறப்பு அறைகள் கொண்ட கட்டிடத்தையும், பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார் பட்டியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள, பொதுசுகாதார அலகு கட்டிடத்தையும், காலையில், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்குதல் மற்றும் யானைக்கால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, மாதாந்திர நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்குதல்- ஆகிய நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நெல்லை மாநகராட்சி ஆணையர் என்.ஓ.சுகபுத்ரா, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் [DEAN] டாக்டர். சி. ரேவதி பாலன், திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சி.ராபர்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் பாளையங்கோட்டை மு.அப்துல் வகாப், நாங்குநேரி ரூபி ஆர் மனோகரன், நெல்லை மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தமிழக முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் ஆகியோர், கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.