கன்னியாகுமரி, ஜனவரி 16:
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் (IREL) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு சூழலியல் மற்றும் ஆரோக்கியக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அந்நிறுவனத்தின் திட்டங்களை முன்னின்று நடத்துவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
மணல் தோண்டி எடுக்கப்பட்டு கதிரியக்க தாதுக்கள் பிரிக்கப்படும் செயல்பாடுகளால் கடல் அரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு மற்றும் விவசாய நிலங்கள் பாழாவது போன்ற புகார்கள் பல ஆண்டுகளாக நீடிக்கின்றன. குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவர் அஜய்குமார் நடத்திய ஆய்வில், குமரி மாவட்டத்தில் தைராய்டு புற்றுநோய் அதிகரிப்பதற்கு கதிரியக்கத் தாக்கமே முக்கிய காரணம் எனக் குறிப்பிட்டிருந்தார். 2010-ல் 30,000 மக்களிடம் நடத்தப்பட்ட விரிவான மருத்துவ ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படாதது, இக்குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது என நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் தொகுதி வேட்பாளர் ஹிம்லர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் “ஐஆர்இஎல் விரிவாக்கத்திற்கு எதிராக என் நெஞ்சில் முதல் குண்டு பாயட்டும்” என ஆவேசமாக முழங்கிய சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், தற்போது அதே நிறுவனத்திடம் இருந்து குப்பை வண்டிகளைப் பெற்று தொகுதி மக்களுக்கு அர்ப்பணித்து வருவது அவரது இரட்டை வேடத்தைக் காட்டுகிறது என ஹிம்லர் விமர்சித்துள்ளார்.
“மக்களுக்காகப் போராடுவது போல நடித்துவிட்டு, மறுபுறம் நிறுவனத்தின் நிதியுதவித் திட்டங்களை முன்னின்று நடத்துவது மக்களை ஏமாற்றும் செயல்” எனக் குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமாரின் இந்த நிலைப்பாடு, பொதுமக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
