பத்துகாணி,ஜனவரி 30:
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இப்பகுதியில் இயங்கி வந்த பழைய மருத்துவமனைக் கட்டிடம் பழுதடைந்து இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, அதனை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.
இருப்பினும், இந்தப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுக்கும் காலங்களில் மட்டும் பணிகள் வேகம் எடுப்பதும், பின்னர் மீண்டும் கிடப்பில் போடப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
தற்போது கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், மாற்று இடத்தில் இயங்கி வரும் தற்காலிக மருத்துவமனை மிகவும் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளும், முதியவர்களும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, முடங்கிக் கிடக்கும் கட்டுமானப் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு துரிதப்படுத்த வேண்டும் என்றும், பணிகளை விரைந்து முடித்து புதிய மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
