உடுமலை அருகே பெரிய கோட்டை பிரிவிலிருந்து மருள்பட்டி கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.இந்த சாலையின் குறுக்காக ரெயில் பாதை உள்ளதால் அதை கடந்து செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை கட்டப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கி வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது.
குறிப்பாக மழைக்காலத்தில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும்போது மாற்று வழியை தேடி அலைய வேண்டிய சூழல் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.இதனால் சுரங்கப்பாதை அமைத்த நோக்கம் வீணாகும் சூழல் நிலவுகிறது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த பாதையானது சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.அதில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால் அவசரகால உதவிகளை கூட பெற முடியாத நிலை ஏற்படுகிறது.மேலும் வாகனங்களும் பழுது அடைந்து நின்று விடுகிறது.இதனால் அவற்றை சீரமைப்பதற்கு மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மழைநீர் உள்ளே செல்லாதவாறு மேற்கூரை அமைத்து இரண்டு பக்க நுழைவாயிலும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
உடுமலை நிருபர் : மணி