வாணியம்பாடியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சோதனையின் போது அதிகாரிகளை வணிகர்கள் சிறை பிடித்து வாக்குவாதம். அரசு அனுமதித்த பயோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்ததால் வாக்குவாதம்.
வாணியம்பாடி, டிச 20- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள உணவகங்கள், இனிப்பு கடைகளில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து நிலையம் முன்பாக உள்ள உணவகத்தில் சோதனை மேற்கொண்ட போது அங்கே அரசு அனுமதிக்கப்பட்ட பயோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்து ரூபாய் 10 ஆயிரம்
அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அருகில் உள்ள இனிப்பு கடையில் நுழைந்த அதிகாரிகள் அங்கேயும் அரசால் அனுமதிக்கப்பட்ட பயோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அந்த இனிப்பு கடைக்கு ரூபாய் பத்தாயிரம் அபராதம் செலுத்துவதாக கடை ஊழியரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இனிப்பு கடை உரிமையாளர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அரசு அனுமதிக்கப்பட்ட பயோ பிளாஸ்டிக் முறையாக கொள்முதல் செய்து அதற்கான அரசுக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தி உள்ளேன். இப்படி இருக்கும் நிலையில் நீங்கள் எப்படி பறிமுதல் செய்யலாம்.
தகவலின் பேரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ் மாதேஸ்வரன் தலைமையில் வணிகர்கள் விரைந்து சென்று இனிப்பு கடை உரிமையாளருக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள உணவகம் மற்றும் இனிப்பு கடையில் பறிமுதல் செய்த பயோ பிளாஸ்டிக் பைகளை திருப்பித் தந்து விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்தனர்.
சம்பவம் குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தொல்காப்பியணிடம் கேட்டபோது அரசு அனுமதிக்கப்பட்ட பயோ பிளாஸ்டிக்கை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது தவறுதான் என்றார்.
வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் கே.பி.எஸ்.மாதேஸ்வரன் கூறுகையில்:–
ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டகை நாட்கள் நெருங்கும் போது அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. அரசு விதிகளுக்கு எதிராக செயல்படும் வணிகர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகளுக்கு ஆதரவு அளிக்கப்படும் என்றார்.