செப் 27 கன்னியாகுமரி
ஒருகாலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 10,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. ஆனால், படிப்படியாக விவசாய நிலங்கள் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பிற உபயோகங்களுக்கு மாற்றப்பட்டதால், தற்போது அது 6,500 ஹெக்டேராக குறைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் சாகுபடி ஆண்டுதோறும் இரண்டு பருவங்களில் நடைபெறுகிறது. அவை கன்னிப்பூ மற்றும் கும்பபூ. தற்போது கன்னிப்பூ பருவ நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக பறக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
இதனால் நெல் மணிகள் ஈரமாகி தரம் குறையும் அபாயம் அதிகரித்துள்ளது. தரம் குறையும் நிலையில் நெல் சந்தையில் விலை குறையும் வாய்ப்பும் உள்ளது. இதனால் உழைத்து வளர்த்த பயிர் மதிப்பிழக்கும் என்ற அச்சத்தில் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாயிகள்,
“நாங்கள் பல சிரமங்களை தாண்டி உழைத்து பயிரிட்ட நெல், அறுவடை நேரத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் குறைந்து கடன் சுமையிலும் சிக்க நேரிடும் அபாயம் உள்ளது” என கவலை தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு, அரசு உடனடி நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் பாவலர் ரியாஸ்.
