தென்காசி :செப்-07
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் திருத்தலமான து 400 ஆண்டுகளுக்கு மேல் அனைத்து மதத்தினருக்கும் அருள்பாலித்து புதுமைகள் பல புரிந்து கொண்டிருக்கும் ஆலயம் ஆனது தென்காசி திருநெல்வேலி செல்லும் சாலை தினசரி மார்க்கெட் அருகில் அமைந்துள்ளது.
இந்த மார்க்கெட் கட்டிடம் ஆனது கடந்தாண்டு இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுமான நடைபெற்று வந்த நிலையில் இதற்கான வாயில்கள் ஆலயத்தின் எதிர்புறம் பெரிய அளவில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆலய நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்து மேற்படி வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த 25. 7 .25 அன்று நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் முத்துராமலிங்கம் அவர்கள் நேரடியாக கள ஆய்வினை நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் மேற்கொண்டார்.
அப்போது ஆலய நிர்வாகத்தினரும் உடன் இருந்தனர். அப்போது ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மார்க்கெட் வாயில் அமைக்கப்படும் என்று விசாரணை அலுவலர் உறுதி அளித்துவிட்டு சென்றதன் அடிப்படையில் அன்றைக்கு நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே துணை ஆட்சியர் தெரிவித்த உத்தரவாதத்திற்கு எதிராக ஆலயத்தின் எதிர் புறம் 15 அடி அகலத்தில் இருபுறமும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இது ஆலய நிர்வாகத்திடம் தெரிவித்த கருத்துக்கு முரண்பாடாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 1 .9. 2025 அன்று வீரமாமுனிவர் ஆர் .சி .மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானமாக மாணவ மாணவிகள் பயன்படுத்தி வரும் இடத்தில் ஏற்கனவே அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நியாய விலை கடை அமைப்பதற்கான வானம் தோண்டும் பணி எவ்வித முன்னறிவிப்பு இன்றி திடீரென்று மேற்கொள்ளப்பட்டது.
இதை அறிந்த பள்ளி நிர்வாகம் அதை தடுத்து நிறுத்தி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது அதன் பின் அந்த பணி அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது.
தொடர்ந்துநகராட்சி நிர்வாகம் தென்காசி மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆலயத்திற்கு எதிராக அமைந்திருக்கும் தினசரி சந்தையின் இரு நுழைவாயில் அகற்ற வேண்டியும், வீரமாமுனிவர் ஆர். சி .மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளின் விளையாட்டு மைதானத்தில் நிறுவப்பட இருக்கும் ரேஷன் கடையை இடமாற்றம் செய்ய வேண்டியயும் தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர் மற்றும் ஆணையாளரை கண்டித்தும் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பண்டாரகுளம் பங்கு தந்தையும் தென்காசி வட்டார அதிபருமான எஸ்.ஏ அந்தோணிசாமி அடிகளார் தலைமை வகித்தார் .மரிய லூயிஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார் .தென்காசி பங்கு தந்தையும் அதிபருமான ஜேம்ஸ் அடிகளார் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையினை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தென் மண்டல அமைப்புச் செயலாளர் ரவி மற்றும் பங்கு பேரவையைச் சேர்ந்த ஜோதிகாசி, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தைச் சார்ந்த சந்திரசேகர் ஆர் சி பள்ளியின் ஆசிரியை செல் அமலி செல்வராணி ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்ட மானது ஏன் எதற்கு நடைபெறுகிறது என்பது குறித்தும், சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அரசு என சொல்லும் முதல்வர் அவர்கள் தென்காசி நகர்மன்ற தலைவரை தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லையா? இதே நிலை தொடர்ந்தால் கிறிஸ்தவ மக்களாகிய நாங்கள் 2026 தேர்தலில் எங்களின் அரசுக்கு எதிரான முடிவுக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் எனநீண்ட நெடிய விளக்க உரையினை ஆலங்குளம் பங்குத் தந்தை அருட்திரு மை.பா.
சேசுராஜ் ஆற்றினார். தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்ற தலை வரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்தத ஆர்பாட்டத்தில் வல்லம் பங்குத்தந்தை விசுவாச ஆரோக்கிய ராஜ், புளியங்குடி பங்குத் தந்தை எட்வின், பாளை மறைமாவட்ட பொருளாளர் தீபக், மேலமெஞ்ஞானபுரம் பங்குத்தந்தை அல்போன்ஸ், சிதம்பராபுரம் பங்குத்தந்தை அந்தோணிராஜ், வாடியூர் பங்குத் தந்தை லியோ ஜெரால்டு, சுரண்டை பங்குத் தந்தை ஜோசப் ராஜன், தென்காசி திருத்தலத்தின் உதவிப் பங்குத் தந்தை ஜியோ சந்தனம், அருட்சகோதரிகள்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிர்வாகிகள், மற்றும் அரக்கட்டு, பண்டார குளம் மேலமெஞ்ஞானபுரம், செங்கோல் நகர், இலத்தூர், சுந்தர பாண்டியபுரம், குத்துக்கல்வலசை, வல்லம் ஆகிய பகுதிகளை சேர்ந்த இறைமக்கள் சுமார் 600 நபர்களுக்கு மேல் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்பாட்ட த்தின் நிறைவில் அகரக்கட்டு பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர் : முகம்மது இப்ராஹிம்
