நாகர்கோவில், ஜனவரி 19 :
மாநகராட்சியின் முக்கிய சந்திப்பான செட்டிக்குளம் – சவேரியார் கோவில் பகுதியில்,சமீபத்தில் அவசரம் அவசரமாக நடைபாதைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்தப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டதன் நோக்கம் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே என்று கருதப்பட்ட நிலையில், தற்போதைய களநிலவரம் அதற்கு மாறாக உள்ளது.
குறிப்பாக, மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்கள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது, அவரது முன்னிலையிலேயே பல இடங்களில் நடைபாதைகள் வணிகப் பொருட்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணிக நிறுவனங்கள் தங்களது பொருட்களை அடுக்கி வைத்திருப்பதை மேயர் கவனித்தும், அது குறித்து உடனடி நடவடிக்கைகளோ அல்லது எச்சரிக்கைகளோ விடுக்காதது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி சட்ட விதிமுறைகளின்படி, நடைபாதைகள் என்பது பாதசாரிகளின் பிரத்யேக பயன்பாட்டிற்கானது. ஆனால், இங்கு வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வணிக நோக்கத்திற்காக மடைமாற்றப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
“யாருக்காக இந்த நடைபாதை?” என்ற அடிப்படை வினாவை மக்கள் எழுப்புகின்றனர். ஒருபுறம் மாநகரத்தை நவீனப்படுத்த நிதிகள் செலவிடப்படும் நிலையில், மறுபுறம் நடைமுறை பயன்பாட்டில் ஆக்கிரமிப்புகளைத் தவிர்க்கத் தவறுவது நிர்வாகத்தின் மெத்தனப்போக்காகவே பார்க்கப்படும். எனவே, மேயர் அவர்கள் வெறும் ஆய்வுகளோடு நிறுத்திக் கொள்ளாமல், சட்டத்திற்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் தடையின்றி நடைபாதையைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
