Headlines

இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

இளங்கடை கச்சேரி சாலை: டிப்பர் லாரிகளின் அட்டகாசம் — மக்கள் அவதி

குடியிருப்பு பகுதி சாலை கனரக வாகனங்களால் சேதம் இருபுறமும் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதியாக உள்ள இளங்கடை கச்சேரி சாலை, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக தார் சாலையாக அமைக்கப்பட்டது. முன்பு கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் மட்டுமே இயங்கிய இந்த சாலையில், கடந்த சில மாதங்களாக டாரஸ் மற்றும் டிப்பர் லாரிகளின் தொடர்ச்சியான போக்குவரத்து அதிகரித்துள்ளது.

அதிகாலை முதல் இரவு வரை லாரி ஊர்வலம் அதிகாலை நேரத்திலேயே தொடங்கும் லாரி போக்குவரத்து, நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களை இந்த சாலையில் கொண்டு வருகிறது. அதிவேகமாக செல்லும் லாரிகள் சாலையை சேதப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன.

நடைபயிற்சி மக்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சம்
காலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் லாரிகளின் வேகப் பயணத்தால் அச்சமடைந்து வருகின்றனர். முன்பு பாதுகாப்பு காரணங்களால் மினி பேருந்துகளுக்கே அனுமதி மறுக்கப்பட்ட சாலை, தற்போது கனரக லாரிகளின் ஆதிக்கத்தில் உள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உடல்நல பிரச்சினைகள் அதிகரிப்பு
மண், கல் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து கிளம்பும் தூசி வீடுகளுக்குள் புகுந்து, சளி, தும்மல், சைனஸ், நீடித்த தலைவலி உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. உணவு மற்றும் குடிநீரிலும் தூசி கலப்பதால் வயிற்று கோளாறுகளும் உருவாகின்றன என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி, மருத்துவமனை அருகே அபாய நிலை
இந்தச் சாலையோரமே அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் உகாசேவா மருத்துவமனை அமைந்துள்ளன. காலை, மாலை நேரங்களில் மாணவர்கள் நடந்து செல்லும் வேளையில் லாரி போக்குவரத்து அதிகரிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவமனை சுகாதார சூழலுக்கும் இது பாதிப்பை உண்டாக்குகிறது.

விபத்து அனுபவமும் மக்கள் குற்றச்சாட்டு
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஸ்கூட்டரை பின்தொடர்ந்து வந்த லாரி மோதிய சம்பவமும் பதிவாகியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டுமென கோரிக்கை
“கச்சேரி ரோடு” தற்போது “டாரஸ் லாரி ரோடு” ஆக மாறிவிட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கனரக லாரி போக்குவரத்திற்கு தடை விதித்து, மக்கள் நிம்மதியாக சுவாசிக்கும் சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *