பழனி RF ரோட்டில் செயல்பட்டு வரும் குமரன் பேக்ஸ் அண்ட் ஸ்வீட்ஸ் – ல் விற்பனை செய்யப்படும் பிரட் பாக்கெட்டில் விலை மற்றும் தயாரிப்பு தேதி (expired date) இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பழனி நகரம் ஆன்மிக நகரம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். பழனியில் உள்ள பேக்கரி , டீ கடைகள் , உணவு விற்பனை செய்யும் உணவகங்கள் என பல இடங்களில் சுகாதாரம் இல்லாமல் உணவு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் பக்தர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
உணவு பண்டங்களில், குளிர்பானங்களை காலாவதியான பின்பும் விற்பனை செய்வதால் அதை வாங்கி சாப்பிடும் மக்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு நோய் தாக்கும் அபாயம் இருக்கிறது. மாவட்டத்தில், பெரும்பாலான கடைகளில் அளவுக்கு அதிகமாக குளிர் பானங்கள், உணவு பண்டங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். கடைகள் அதிகரித்து வருவதால் மக்கள் ஆங்காங்கே உள்ள கடைகளில் பொருட்களை வாங்குவதால், சில கடைகளில் உணவு பொருட்கள், குளிர்பானங்கள் தேக்கமடைகின்றன.

உணவு பொருட்கள் காலாவதி தேதிக்கு பின் அதை சாப்பிட்டால் பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதனால் குளிர்பானங்கள் உட்பட பல காலாவதியான பொருள்களை உரிய நிறுவனங்களிடமே திரும்ப ஒப்படைத்து விட வேண்டும். ஆனால் கடை உரிமையாளர்கள் அந்த பொருட்களை திரும்ப ஒப்படைக்காமல் அப்படியே விற்பனை செய்து வருகின்றனர். பொருளின் தரம், காலாவதி தேதி குறித்து கடை உரிமையாளரும் சரி, மக்களும் கண்டு கொள்வது கிடையாது.
அதே நேரத்தில் குளிர்பானங்களில் காலாவதி ஆகும் தேதியை நிறுவனங்கள் தெளிவாக பதிவு செய்வது கிடையாது. குளிர்ந்தால் போதும் என மக்களும் வாங்கி குடிக்கின்றனர். இது போன்ற நிலையை தவிர்க்க அதிகாரிகள் உரிய நேரத்தில் ரெய்டு நடத்தி, காலாவதி பொருட்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயம், பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் வைப்பது கிடையாது.

அன்றாடம் கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் மன நிம்மதிக்காக தரிசனம் செய்ய பழனிக்கு வருகின்றனர். அதன்படி வரும் பக்தர்கள் , பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாமல் பசியின் காரணமாக உணவு பொருட்களை வாங்கி உண்பதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை தவிர்க்க ஓட்டல்கள், பலசரக்கு கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகள் ரெய்டு நடத்தும் போது ஒரு சில நாட்களுக்கு விலை பட்டியல் வைக்கும் கடைகாரர்கள், நிரந்தரமாக வைப்பதில்லை. இதனை அடிக்கடி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கடமைக்காக ரெய்டு நடத்துவதால் உரிமையாளர்களும் கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர்.
அனைத்து கடைகளிலும் விலை பட்டியல் வைப்பதோடு, காலாவதி பொருட்களை பறிமுதல் செய்ய அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் நிர்ணயம் விதிமுறைகளின் படி காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடைக்கு சீல் வைக்க வேண்டும்.

அதிகாரிகள் அலட்சியம் காரணமாக அப்பாவி பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதுசம்பந்தமாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
