வாணியம்பாடி,ஜூன்.11-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஏடிஎம் (ATM) மையங்களுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஏடிஎம் கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை எடுத்து ஏமாற்றி வந்த நபர் குறித்து காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

அதன் அடிப்படையில் ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்த தனராணி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.எல் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த நபர் ஒருவர் பணத்தை எடுத்து தருவதாக கூறி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து உள்ளார்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற அவர் சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக மெசேஜ் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அவர் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதே போன்று காமராஜ்புரத்தில் பெண் ஒருவர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்த மர்ம நபர் ஒருவரிடம் பணத்தை எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து நகர காவல் நிலையத்தில் அவர் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த எல்லப்பா மகன் மஞ்சுநாத் (வயது 49), மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த மாரப்பா மகன் பிரவீன்குமார் (வயது 44) ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட பல வங்கியின் ஏடிஎம் கார்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
