செப் 10 கன்னியாகுமரி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேஷ்டி மற்றும் சேலை வழங்கி வருகிறது.
இந்தத் திட்டம் தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளிப்பதோடு, கைத்தறி நெசவாளர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள பெரிய அரசுங்கன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு வேஷ்டிகள் நெய்யப்பட்டு வருகின்றன.
கைத்தறி தொழிலாளர்கள் பல வாரங்களாக உழைத்து வந்த நிலையில், தற்போது தயாரிப்புகள் நிறைவடைந்து, பார்சல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தயாரான வேஷ்டிகள் ஒவ்வொன்றாக முறையாக மடக்கி, பொதி செய்து, அரசின் விநியோக மையங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் கையிலே செல்லும் முன் ஒவ்வொரு துணியும் தரச் சோதனையில் பரிசோதிக்கப்படுவதாக சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேல் உள்ள நிலையிலும், தயாரிப்புகள் இப்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் விநியோகத்தில் தாமதம் ஏற்படாமல், திருவிழா நாட்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நேரம் தவறாமல் வேஷ்டி–சேலை கிடைப்பதை அரசு உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.
இலவச வேஷ்டி–சேலை திட்டம், பொதுமக்களுக்கு விழாக்காலத்தில் உதவியாக இருப்பதோடு, கைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையிலும் செயல்படுகிறது.
ஏனெனில், இத்தகைய பெரிய அளவிலான அரசுப் பணிகள் அவர்களுக்கு நிலையான வேலை வாய்ப்பை வழங்குகின்றன.
வரும் ஜனவரியில் கொண்டாடப்படும் பொங்கலுக்கு முன்னதாகவே இந்த வேஷ்டி–சேலைகள் அட்டைத்தாரர்களிடம் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விழாக்கால உற்சாகம் மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.
குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
